விவசாயிகளுக்கு அடிபணிந்தது அரசு.. ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு : உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வருகிறது!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 7:51 pm

பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை நவீன கருவிகளுடன் சரியான முறையில் மூட வேண்டும் என்றும் வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என ஒஎன்ஜிசி நிர்வாகத்திற்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் வருவாய் கிராமத்தில் உள்ள பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறில் கடந்த 2012 ல் ஏற்பட்ட அதிக அழுத்தம் கொண்ட எரிவாயு கசிவின் காரணமாக 2013ல் அப்போது உள்ள கருவிகளுடன் இந்திய எண்ணெய் எரிவாயு கழகத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டது. 

இதனையடுத்து பத்து வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் பெரியகுடி எண்ணெய் கிணற்றில் நவீன கருவிகளுடன்  மூட அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மன்னார்குடி வட்டாட்சியர் தலைமையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி கருத்துக்கணிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் மீண்டும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து  ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக ஒ என்ஜிசி நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளதாக கூறி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி தலைமையில் இது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.அதனைத் தொடர்ந்து பெரியகுடி எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பெரியகுடி எண்ணெய் கிணறை நவீன கருவிகளுடன் சரியான முறையில் மூடிட உத்தரவிட்டுள்ளதுடன் அந்த எண்ணை கிணற்றில் வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் தற்போது உத்தரவிட்டுள்ளார். 

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…