கொட்டும் மழையில் பள்ளியில் நடந்த விழா.. மனிதமே இல்லாமல் மாணவர்களை மழையில் அமர வைத்த நிர்வாகம்!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2024, 6:13 pm
கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள லிசிக்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகளை மைதானத்தில் அமர வைத்த பள்ளி நிர்வாகம் மேடைக்கு மட்டும் கூரையுடனான அரங்கம் அமைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ளது லிசிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த பள்ளியில் ஆயிரத்தும் மேற்பட்ட மாணவ மாணவிகள் என்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அப்பள்ளியில் விளையாட்டு விழா பள்ளி முதல்வர் ஜாய் ஆரேக்கல் நடைபெற்றது. இந்த விழாவில் ஏற்கனவே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவினை ஒட்டி மாணவ மாணவிகள் பள்ளி மைதானத்தில் தரையில் அமர வைக்கப்பட்டனர். பரிசுகள் வழங்குவதற்காக மேடை அமைக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
விழா மேடைக்கு மட்டும் மேற்கூறையிட்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோவையில் பரவலாக சாரல் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் மாணவ மாணவியர் அமரும் பகுதியில் எந்த ஒரு மேற்கூரையிட்ட அரங்குகளும் அமைக்காமல் அனைவரும் தரையில் அமர வைக்கப்பட்டிருந்த சூழலில் காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
ஆனாலும் மாற்று ஏற்பாடு செய்யாத நிர்வாகம் மழையில் நனைந்தபடியே மாணவ மாணவியரை அமர வைத்து விழாவை நடத்தியது. பெற்றோர்களுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படாத சூழலில் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் மட்டும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாணவ மாணவியர் மழையிலேயே நனைந்தபடி அமர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி உள்ள நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரின் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனிடையே பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் மீது பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.