பாம்பு கடித்து பலியான சிறுவன்… டோலி கட்டி தூக்கி வந்த அவலம் : சாலை அமைப்பதாக கூறிய திமுக எம்எல்ஏ திரும்பி வரவில்லை என மக்கள் வேதனை!!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2022, 4:16 pm
ஆம்பூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த 12 வயது பள்ளி மாணவனை உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவல நிலையில் சாலை வசதி இல்லாததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட குப்புராஜபாளையம் மலை பகுதியை ஒட்டியுள்ள இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவன்.
இவரது மகன் அர்ஜுன் என்கின்ற அஜித்குமார் (வயது 12). அறங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை மாலையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவனை விஷ பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. மாணவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை வசதி இல்லாததால் டோலி மூலமாக தூக்கி வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
இறந்த மாணவனின் நேற்று இரவு உடலை வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அருகே உள்ள மலைப்பகுதி ஒட்டி உள்ள கிராமத்திற்கு கொண்டு செல்லும்போது சாலை வசதி இல்லாததால் மாணவனின் உடலை டோலி கட்டி 3 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் இருளில் தூக்கிச் சென்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது குறித்து மாணவனின் உறவினர்கள் அளித்துள்ள பேட்டியில், கடந்த 30 ஆண்டுகளாக 20 க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் மலைப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வருவதாகவும் பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்து விட்டு சென்றவர் இதுவரை எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தனர்.
அப்பகுதி மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலை வசதி இல்லாததால் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஷப்பூச்சி கடித்து இறந்து உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்