வெள்ளியங்கிரியில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் சிலை உடைப்பு… விசாரணையில் வெளியான உண்மை!
Author: Udayachandran RadhaKrishnan7 September 2024, 7:31 pm
கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ளது தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில். இக்கோவிலின் கிழக்கு பகுதியிலேயே பக்தர்கள் முருகனின் ஏழாவது படை வீடு என போற்றும் மருதமலை அமைந்து உள்ளது.
பல அதிசயங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த வெள்ளியங்கிரி மலையில் பல அற்புத மூலிகைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஏழு மலைகளும் ஒவ்வொரு வகையான தனித்துவமும், சிறப்புகளும் கொண்டதாகும்.இங்கு ஏராளமான சுனைகளும் சிறிய கோவில்களும் உள்ளன. ஏழு மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தால் கைலாயத்திற்கு சென்று சிவனை தரிசித்த பயன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே என மூன்று மாதங்கள் மட்டுமே மலைக்கு சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து வந்தனர்.
இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என நான்கு மாதங்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த மே 31 ஆம் தேதி வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி செல்ல அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2″ ஆம் தேதி அம்மாவாசை அன்று கோவில் காவலர் வெள்ளியங்கிரி என்பவர் சென்றபோது ஆறாவது மலை ஆண்டி சுனை அருகே உள்ள சுயம்புவாக தோன்றிய தான்தோன்றி விநாயகர் சிலை சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து மலையில் இருந்து கீழே இறங்கிய பின்னர் கோவில் காவலர் வெள்ளியங்கிரி இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பெயரில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றனர்..? அல்லது வனவிலங்குகள் சேதப்படுத்தியதா..? என்ற கோணத்தில் போளுவாம்பட்டி வனத் துறையினர் விசாரணை செய்ததில் யானை சேதப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.