தேமுதிக பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை.. காஞ்சி என்கவுன்டர் சம்பவத்தில் அதிர வைக்கும் பின்னணி!!!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2023, 9:51 am
தேமுதிக பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை.. காஞ்சிபுர என்கவுன்டர் சம்பவத்தில் அதிர வைக்கும் பின்னணி!!!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபா என்ற பிரபாகரன். வயது 35. ஏ நிலை ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகளும் 25 க்கும் மேற்பட்ட , கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ரைஸ் மில் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக பிரபாகரன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை புதுப்பாளையம் தெருவில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து காவல் நிலையத்தில் கையொப்பம் இட நடந்து செல்ல முயன்ற போது பிரபாகரனை காரில் வந்த 4 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் படுகொலை செய்து விட்டு காரில் ஏறி தப்பினர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஏடிஎஸ்பி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதேபோல் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தேமுதிமுக கட்சியின் நிர்வாகி சரவணன் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் விதமாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள சரவணனின் உடன் பிறந்த தம்பி ரகு என்பவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்வதில் ஒரு சொகுசு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து இறங்கி வந்து பிரபாகரனை கண்டம் துண்டமாக கொலை செய்துவிட்டு காரில் ஏறி தப்பியது தெரியவந்தது.
அதனைதொடர்ந்து பிரபாகரன் கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் மூன்று தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் கொலை வழக்கில் மறைந்த தேமுதிக பிரமுகர் சரவணனின் தம்பி ரகு (எ) ரகுவரன் மற்றும் கருப்பு பாட்ஷா (எ) ஹசைன் ஆகிய இருவரையும் கைது செய்து காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே இந்திராநகர் சர்வீஸ் சாலையில் வைத்து மார்பு மீது காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
“எப்போதும் போல” குற்றவாளிகள் தப்ப என்ற போது குற்றவாளிகள் தாக்கியதில் சிவகாஞ்சி காவல்நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகியோர் காயம் அடைந்தனர் . அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ரவுடிகள், மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அவர்களை எலலாம் என்கவுண்டர் செய்யாமல் விட்டுவிட்டு, சிறுசிறு குற்றங்களை செய்து வருகின்ற, பலம் இல்லாத ரவுடிகளை என்கவுண்டர் செய்து இதன் மேலும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு உள்ளது என நிரூபிக்க மாவட்ட காவல்துறை முயற்சி செய்வதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.