5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!

Author: Vignesh
23 August 2024, 12:08 pm

திருச்சி அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய மாணவி – மருத்துவ துரித செயல்பாட்டால் மாணவியன் உணவுக் குழாயில் இருந்த நாணயம் எடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்துள்ள மணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகள் கிருத்திகா (7) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தனது தந்தையிடம் தின்பண்டம் வாங்க காசு கேட்டார்.

உடனே, திருநாவுக்கரசு 5ரூபாய் நாணயத்தை மகளிடம் கொடுத்து தின்பண்டம் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த நாணயத்தை சிறுமி தனது வாய்க்குள் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாணயத்தை சிறுமி விழுங்கி விட்டார்.

இதனால், சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, இதுகுறித்து தந்தையிடம் அந்த சிறுமி தெரிவித்தாள். இதனால் பதறி துடித்த திருநாவுக்கரசு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாணயத்தை எடுக்க முயன்றார். ஆனால், தொண்டையில் சிக்கிய நாணயம் உள்ளே சென்று விட்டது. இதனால், சிறுமியை காப்பாற்ற உடனடியாக முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

அதன்பேரில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமி கிருத்திகா அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உணவுக்குழாய் பகுதியில் நாணயம் இருப்பதை கண்டறிந்தனர். அப்போது மூச்சுத் திணறலால் சிறுமி அவதியுறவே சர்ஜிகல் கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி துறைத் தலைவர் கண்ணன் தலைமையில் மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜசேகர், சங்கர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிறுமியின் உணவு குழாயில் அடைபட்டு கிடந்த நாணயத்தை வெளியே எடுத்தனர்.

தற்போது சிறுமி நலமுடன் உள்ளார். துரிதமாக செயல்பட்டு சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 232

    0

    0