சாலை விபத்தில் காயமடைந்த அரசு பள்ளி ஆசிரியை.. காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆட்சியர்!!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2022, 9:20 pm
சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஒத்தக்கடை திருச்சி துறையூர் சாலையில் விபத்தில் காயமடைந்த பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் திருவெள்ளரை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அவர் இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற போது துறையூர் சாலையில் ஒத்தக்கடை என்ற இடத்தில் மற்றொரு இரு சக்கர வாகனம் விஜயலட்சுமி ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆசிரியை விஜயலட்சுமி சாலையில் கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது அவ்வழியாக உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி காயம் அடைந்த பள்ளி ஆசிரியை உடனடியாக தனது காரில் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தனது ஆய்வு பணிக்கு புறப்பட்டு சென்றார். தலைமை ஆசிரியரை மாவட்ட ஆட்சியர் மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.