முடிவுக்கு வந்த போக்குவரத்துத் துறை காவல்துறை மோதல்.. நடந்துநர் – காவலர் இடையே சமாதானம்.. வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 4:36 pm

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது. அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது.

நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்.

வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் ‘நோ பார்க்கிங்’-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும் படிக்க: போதை ஊசி போட்டு சிறுவன் பலி… பின்னணியில் பெரிய நெட்வொர்க்? பகீர் கிளப்பும் அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவலரும் பேருந்து நடத்துனரும் சமாதானமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “நான் என்னோட கருத்தை சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள். பிறகு டிக்கெட் எடுத்து நீங்கள் பயணம் செய்தீர்கள். ஆனால் அது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பிரச்சினையானது. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பேருந்து நடத்துநர் சொல்கிறார். அதற்கு நானும் வருத்தம் தெரிவிக்கிறேன். இனிமேல் போக்குவரத்து துறையும் காவல்துறையும் நண்பர்களாக செயல்படுவோம் என காவலர் பேசுகிறார். பிறகு இருவரும் கைகுலுக்கி , கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொண்டு தேநீர் குடிக்கின்றனர்.

இதனையடுத்து, அரசு பேருந்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!