கேள்வி கேட்ட கவுன்சிலர்… மேடையில் இறங்கி ஓடி வந்து தாக்கிய எம்எல்ஏ : திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan25 October 2023, 2:41 pm
கேள்வி கேட்ட கவுன்சிலர்… மேடையில் இறங்கி ஓடி வந்து தாக்கிய எம்எல்ஏ : திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு!
சென்னை திருவெற்றியூரில் மேற்கு பகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் திமுக மாமன்ற உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவெற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் பேசிக் கொண்டிருந்தபோது திமுக மாமன்ற உறுப்பினர் சிவக்குமார் திமுக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்குவதில்லை என குற்றம் சாட்டினார்.
எம்எல்ஏ நிதி ஒதுக்காததால் தனது வார்டில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அனைவரும் முன்னிலையிலும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய அவர், எதுவாக இருந்தாலும் முறைப்படி கோரிக்கை மனு அளிக்கவேண்டும், தொகுதி வளர்ச்சி குறித்து பேசுவதற்கான இடம் இது இல்லை எனவும், பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலையிட்டு பதில் அளித்தார்.
இதனால் திமுக எம்எல்ஏவுக்கும் திமுக மாமன்ற உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.