ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் ஆட்டம் காட்டிய குற்றவாளி : கோவை காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan17 March 2023, 9:18 am
கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ரியாசுதீன் (வயது 25) மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து இடாமல் இருந்து வந்ததால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா என்கின்ற காஜா உசேன்(24) ஜாமீனில் வெளிவந்த நிலையில், திரும்ப பந்தய சாலை காவல் நிலைய கொலை வழக்கில் ஈடுபட்டதன் காரணமாக அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசன்னா (வயது 22) ஜாமீனில் வெளிவந்த நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கையொப்பம் இடாமல் இருந்து வந்ததால் அவரது ஜாமீனும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் படி ஜாமீனில் வெளிவரும் நபர்கள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு மாறாக ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் தொடரப்படும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.