கனிம வளத்துறை அதிகாரிகளின் நெருக்கடி.. தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கல் குவாரி சங்கம் முடிவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 3:04 pm

கனிம வளத்துறை அதிகாரிகளின் நெருக்கடி.. தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கல் குவாரி சங்கம் முடிவு!!!

கனிம வளத்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதால் கல் குவாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கோவை மாவட்ட கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கத் தலைவா் கே.சந்திரபிரகாஷ் கூறும்போது, கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷா்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக கல் குவாரிகள் மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

குவாரிகளை அளவீடு செய்து அபராதம் விதித்தல், பா்மிட் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளுக்குகூட தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி ஒரு வாரம் வேலைநிறுத்தம் நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கனிம வளத் துறை செயலா் மாற்றப்பட்டு புதிய செயலா் நியமிக்கப்பட்ட பிறகு முன்பைவிட பிரச்னை மேலும் அதிகமாகி உள்ளது. கல் குவாரிகள் விதிமீறலுக்காக சுமாா் ரூ.1,200 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிராவல் மண் எடுப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இந்த பிரச்னை தொடா்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள குவாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து, மாநில அளவில் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பாக அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளது.

மாவட்ட வாரியாக கனிம வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் வழங்கப்படும் பா்மிட் அடிப்படையில்தான் கற்கள் எடுக்கப்படுகின்றன. குவாரிகளுக்கு முறையாக ராயல்டி சிலிப் தர வேண்டும். கனிம வளத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வரும் நிலையில், குவாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பது சரியல்ல.

முறையாக தொழில் செய்யவிடாமல் தொடா்ந்து நெருக்கடி தருவதால் குவாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீா்வு கண்டு, தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தவிா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?