ஆண் வேடமிட்டு மாமியாரை கொலை செய்த மருமகள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி.. நெல்லையில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 2:31 pm

நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதி. திங்கள் கிழமை அதிகாலை வெளியே சென்ற கணவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மனைவி சீதாராமலெட்சுமி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியும் திருட்டு போயிருந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சீதாராமலெட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

நகைக்காக பெண் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இதற்கிடையே சீதாராமலெட்சுமியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது போலீசார் மிரண்டு போனார்கள்.

ஜெர்க்கின் அணிந்து ஆண் வேடமிட்டு ஆயுதங்களுடன் பெண் ஒருவர், வீட்டில் நுழைந்திருப்பது தெளிவாக அதில் பதிவாகியிருந்தது. சீதாராமலெட்சுமியின் குடும்பத்தினரை வரவழைத்து வீடியோவில் இருந்த பெண்ணை அடையாளம் காட்ட சொல்ல, குடும்பத்தினரும் மிரண்டு போனார்கள்.

ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தது வேறு யாருமில்லை… கொல்லப்பட்ட சீதாராமலெட்சுமி மருமகள் மகாலெட்சுமி தான் என்பது தெரியவந்தது

மாமியார் இறப்பால் கண்ணீர் விட்டு கதறி அழுது நாடகமாடிக் கொண்டிருந்த மகாலெட்சுமியை போலீசார் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான திடுக்கிடும் காரணம் தெரியவந்தது.

விவசாயம் பார்த்து வந்த சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு மகன் ராமசாமிக்கு, மகாலெட்சுமியுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடிந்த 6 மாதத்திற்குள் சமையலில் தொடங்கி, சாமி பூஜை வரை மாமியார் மருமகளுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வெடிக்க வெறுத்துப் போன சண்முகவேல், தனது வீட்டின் பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை கட்டி, மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்தார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமியார், மருமகள் இடையே மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது. வீட்டிற்குள் நடந்த சண்டை வீதி வரை செல்ல உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் சமாதனப்படுத்தினர்.

அப்போது சபையில் வைத்து மருமகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சீதாராமலெட்சுமி முன்வைத்ததாகத் தெரிகிறது. அதில் ஆத்திரமடைந்த மகாலெட்சுமி, மாமியாரை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று இரவில் ஜெர்க்கின் அணிந்து ஆண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்த மகாலெட்சுமி, தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளார். மண்டை உடைந்து படுகாயமடைந்த மாமியார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

திருட்டுக்காக நடந்த தாக்குதல் போல் இருக்க வேண்டும் என நினைத்த மருமகள் அவர் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் எதுவும் தெரியாதது போல் மாமியாருடன் மருத்துவமனையில் இருந்தவர் சிசிடிவி காட்சிகளால் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.

மகாலெட்சுமியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர். கருத்து வேறுபாடு பிரச்னையில் மருமகளே மாமியாரை திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 751

    0

    0