நாடாளுமன்ற தேர்தலால் திமுக நீட் தேர்வு ஒழிப்பு நாடகத்தை கையில் எடுத்துள்ளது : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2023, 7:09 pm
நாடாளுமன்ற தேர்தலால் திமுக நீட் தேர்வு ஒழிப்பு நாடகத்தை கையில் எடுத்துள்ளது : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!
இன்று சேலம், ஓமலூரில் அதிமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக – பாஜக கூட்டணி பற்றியும், திமுகவின் கையெழுத்து இயக்கம் பற்றியும் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், தங்கள் கொள்கையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத கட்சி என்றால் அது அதிமுக தான். கூட்டணி என்பது சூழ்நிலை காரணமாக அமைந்தது. அப்படி தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம்.
ஆனால் அதற்காக கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. அது ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. பாஜக கூட்டணியை நாம் (அதிமுக) முறித்துக்கொண்ட பிறகு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.
நாம் மீண்டும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்துவிடுவோம் என திமுகவினர் கூறி வருகின்றனர். அப்படி கூற அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. சிறுபான்மையினரை காக்கும் ஒரே கட்சி அதிமுக தான். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், திமுகவினர் மக்களை ஏமாற்றவே, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்து உள்ளனர்.
இப்படி கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை யாரிடம் கொடுக்க போகிறீர்கள்.? நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் மக்களிடம் கூற திமுக ஒன்றுமே செய்யவில்லை. அரிசி விலை உயர்ந்துள்ளளது. அரசாங்கம் சரிவர செயல்படாததால் மக்கள் அதிகமாக பாதிப்பு அடைந்துள்ளனர் என கடுமையாக குற்றம் சாட்டினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.