ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர் கும்பல்: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்..!!

Author: Rajesh
6 April 2022, 12:46 pm

கோவை: உணவருந்திய பணத்தை கேட்டதற்கு உணவகத்தின் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் தனியார் உணவகம் (ஸ்ரீஅபி ஹோட்டல்) ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த உணவகத்திற்கு பிரதீப்(22) என்ற அதே பகுதியை சேர்ந்த இளைஞர் உணவருந்த சென்றுள்ளார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் 520 ரூபாய்க்கு உணவருந்தி விட்டு 500 ரூபாய் மட்டுமே பணம் கொடுத்துள்ளார். மீதி 20 ரூபாயை கேட்டதற்கு தன்னிடம் இல்லை என்றும் ஏன் இதை வாங்கி கொள்ள முடியாதா எனவும் கூறி உணவகத்தின் காசாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து உணவகம் மூடப்படும் போது அந்த இளைஞர் மேலும் சில இளைஞர்களை கனரக வாகனத்தில் அழைத்து வந்து காலி மதுபாட்டில்களை கொண்டு உணவகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த உணவக உரிமையாளரின் காரையும் சேதப்படுத்தி உணவகத்தில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இதில் காசாளர் பழனிச்சாமிக்கு காயங்கள் ஏற்பட அவரை சக உணவக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து காசாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் ரகளையில் ஈடுப்பட்ட பிரதீப்(22), ஸ்ரீகிருஷ்ணேஷ்வரன்(21), அஜித் குமார்(22) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 6 நபர்களை தேடி வருகின்றனர்.

சிறு வயதியிலேயே மது போதையில் கும்பலாக சேர்ந்து உணவகத்தை இளைஞர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 1408

    0

    0