கஞ்சா வியாபாரியாக மாறிய கறிவேப்பிலை வியாபாரி : மனம் திருந்தி வாழ்வதாக போலீசாரிடம் குமுறுல்.. ஆறுதல் கூறிய எஸ்பி!!
Author: Udayachandran RadhaKrishnan23 டிசம்பர் 2022, 7:38 மணி
கஞ்சா வியாபாரம் மூலம் பணம் வருவதைக் காட்டிலும் பாவத்தை தான் நாம் சம்பாதிக்கிறோம், இதனால் பெற்றதை காட்டிலும் இழந்ததே அதிகம் மனம் திருந்திய கஞ்சா வியாபாரியின் மனக்குமுறல்.
வேலூர் தொரப்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவருக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர். மார்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்த இவருக்கு ஏற்பட்ட தகாத சேர்க்கையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வியாபாரத்தில் இறங்கியுள்ளார்.
இடையில் கைதாகி சிறை சென்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திரன் தான் மனம் திருந்தி வாழ்வதாகவும், எனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் இன்று வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணணிடம் நேரில் முறையிட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட எஸ்.பி மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்து ராஜேந்திரன் வாழ்வாதாரத்துக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் கஞ்சா வியாபாரிகள் கள்ள சாராய வியாபாரிகள் தங்களின் தொழில்களை விட்டு மனம் திருந்தி வாழ விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என்றும் எஸ்பி தெரிவித்தார்.
மேலும் தான் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட போது சந்தித்த இன்னல்களை ராஜேந்திரன் கூறுகையில், நான் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட போது எனது மனைவி பிள்ளைகள் என்னிடம் பேசவில்லை, அவர்களுக்கு சமுதாயத்தில் அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
இதனால் பணம் வருவதை காட்டிலும் பலரின் பாவத்தையே அதிகமாக சம்பாதித்துள்ளோம். இதனால் பெற்றதை காட்டிலும் இழந்ததே எனக்கு அதிகம்.
மேலும் கஞ்சாவால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்களின் வாழ்க்கை அழிந்துள்ளது. இத்தகைய தீமையை இனியும் யாரேனும் செய்ய வேண்டாம்.
பலர்படும் துன்பத்தை நான் கண்ணால் பார்த்துள்ளேன் என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
0
0