பாம்பு கடித்த சிறுமியை டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் அவலம்.. தொடர்கதைக்கு எப்போது முடிவுரை?!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2024, 11:27 am
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு அருகே உள்ள, வட்டவன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது அலக்கட்டு கிராமம்.
இந்த கிராமம் பிற கிராமங்களுடன் தொடர்பில்லாமல் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் உள்ளது. இதில் எட்டு கிலோமீட்டர் தூரம் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இங்கு முப்பதுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, இக் கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா சிவலிங்கி அவர்களின் இளைய மகள் கஸ்தூரி (வயது 14) என்பவரை விஷப்பாம்பு தீண்டி விட்டது. அவரைக் காப்பாற்ற தூரி கட்டி அப்பகுதி இளைஞர்கள், எட்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றனர். அதன் பிறகு சாலை வசதி இருப்பதால் அங்கே ஆட்டோ மூலம் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முதல் உதவி சிகிச்சைக்கு அனுமதிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படியுங்க: ராகவா லாரன்ஸ் எனக்குத் தெரியும்.. மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கியது எப்படி?
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். சாலை வசதி இல்லாமல் இத்தகைய நவீன காலத்திலும், தூரி கட்டி பாம்பு கடித்த சிறுமியை எட்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து செல்லும் அவலம், இன்றும் தொடர்கதையாக உள்ளது.
சாலை வசதி இல்லாததால் தான், இச்சிறுமி கடந்த ஆண்டு, எட்டாம் வகுப்புடன் தனது பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்டார். அதிக தாமதமாவதால், பாம்பு கடித்த சிறுமி உயிர் பிழைப்பாரா?, என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.