ஓட்டுநரின் அலட்சியத்தால் கீழே விழுந்த குழந்தை : கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் பேசிய அரசு ஓட்டுநர்.. பொதுமக்கள் வாக்குவாதம்!! :

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 4:31 pm

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்தை வழி மறித்து பேருந்து ஓட்டுனரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பண்ணாரி நோக்கி நேற்று மாலை சென்ற 5/10 என்ற அரசு பேருந்தை கந்தசாமி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.

பண்ணாரி செல்லும் சாலையில் உள்ள சமத்துவபுரம் என்ற பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கீழே இறங்குவதற்கு முன்பே திடீரென பேருந்தை டிரைவர் நகர்த்தியதால் குழந்தை கீழே விழுந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண், பேருந்து ஓட்டுநரிடம் இறங்குவதற்கு முன்பே ஏன் பேருந்தை எடுத்தீர்கள் என்று கேட்டபோது ஓட்டுனர் அந்தப்பெண்ணை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் பேருந்தை வழி மறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அலட்சியமாக பேருந்தை இயக்கி பெண்ணை ஒருமையில் பேசிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?