தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை : விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2022, 6:40 pm
திருச்சி : ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் அல்ல என திருச்சி விமான நிலையத்தல் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடர்ந்து தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வில்லை என்பதால் தான் அவர் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது. அதிகாரப்பூர்வமாக இன்னும் அவர் அனுப்பியதாக தெரியவில்லை.
இந்நிலையில் அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டார் என்பது போன்ற செய்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி. திமுகவின் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து இது குறித்து பேசியபோது எப்போது அனுப்புவேன் என்று சொல்ல இயலாது என கூறியதாக தகவல் தெரிகிறது.
இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது இன்னும் அனுப்பவில்லை என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் அல்ல. சட்ட மசோதாவை பொறுத்தவரையில் குடியரசு தலைவருக்கு அனுப்ப கடமைப்பட்டவர். அவர் உடனே மசோதாக்களை அனுப்ப வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.
முதல்வர் ஆளுநருக்கு கட்டுப்பட்டவர் என்று தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் மக்களுக்குத்தான் கட்டுப்பட்டவர். ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதி.
அதனால் தான் திமுக ஆட்சி வந்தது முதல் ஆளுநர் பதவி தேவையில்லை என பேசி வந்திருக்கிறது. இப்போதும் அவர்கள் பேசி வேண்டிய நிலை ஏற்படுத்துகின்றனர்
என தெரிவித்தார்.