மீண்டும் கறார் காட்டிய கவர்னர்.. நீதிமன்ற படியேறியும் முடியாத மோதல் : தமிழக அரசு போட்ட பலே திட்டம்?!!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2023, 1:25 pm
மீண்டும் கறார் காட்டிய கவர்னர்.. நீதிமன்ற படியேறியும் முடியாத மோதல் : தமிழக அரசு போட்ட பலே திட்டம்?!!
தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
முன்னதாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழ்நாடு அரசின் அத்தியாவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைப்பது என்பது அரசியல் சாசனங்களுக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீண்ட நாட்களாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது கவலைக்குரியது என கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பல ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார்.
அந்த மசோதாக்களின் விபரம்
✦ சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
✦ தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா
இந்த மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் வருகிற சனிக்கிழமை (18-ம் தேதி) தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சிறப்புக் கூட்டத்தில், கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
0
0