ஈஷாவில் அத்துமீறி நுழைந்த தபெதிக அமைப்பு : வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 6:27 pm

ஈஷா எரிவாயு மயானத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர்களை தடுத்த விவகாரத்தில் ஈஷா யோக மையத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை, மேலும் மயான கட்டுமானப் பகுதிக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறி நுழைய முயற்சித்த தபெதிகவை  சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் ஈஷா யோக மையத்தில் ஆய்வு செய்ய நுழைந்தனர் என்று தபெதிக நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முறையான அனுமதிகளை பெற்று நவீன எரிவாயு மயானம் ஒன்றை ஈஷா யோகா மையம் அமைத்து வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் சிவஞானம், சுப்ரமணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இது தொடர்பாக ஈஷா மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தபெதிகவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற நபரின் தலைமையில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான்தோன்றித்தனமாக ‘உண்மை கண்டறியும் குழு’ என்ற பெயரில் ஈஷாவின் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அவர்களை காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதனை அடுத்து ஈஷாவிற்குள் நுழைய முயன்று முடியாமல் போனதன் காரணமாக ராமகிருஷ்ணன் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஈஷா மயான கட்டுமான பகுதிக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளே நுழைய முயன்ற தபெதிகவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 164

    0

    0