ஏமாற்றத்தின் உச்சத்தில் ஈசன் அமர்ந்த மலை : தென்கைலாயம் எனும் வெள்ளியங்கிரி மலை!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 9:53 am

ஏமாற்றத்தின் உச்சத்தில் ஈசன் அமர்ந்த மலை : தென்கைலாயம் எனும் வெள்ளியங்கிரி மலை!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதை போலவே சிவன் அமர்ந்த மலையெல்லாம் கைலாயம் என்பது பொது மொழி.

அதன் அடிப்படையில் வெள்ளியங்கிரி மலையை தென் கைலாயம் என்றழைக்கிறோம். முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு சிவ பெருமான் மீது தீராத பக்தி.

ஆனால் அந்த பக்தி நாம் நினைப்பது போல் சிவபெருமான் பாதம் பணியும் பக்தி அல்ல. அவர் கரம் பற்றும் பக்தி. பக்தியின் தீவிரத்தில் அவள் யோக நிலையில் சிவபெருமானுக்காக காத்திருந்தாள்.

சிவபெருமானை அடைய விரும்பிய அப்பெண், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சிவபெருமான் வந்து தன்னை ஆட்கொள்ளா விட்டால் உயிர் துறப்பேன் என உறுதி பூண்டிருந்தாள்.

அப்பெண்ணின் பக்தியை அறிந்த சிவபெருமான், அவள் கரம் பற்ற வட திசையில் இருந்து தென் திசை நோக்கி வந்தார். “விடிவதற்குள் சிவபெருமான் வர வேண்டும். இல்லையென்றால் நான் உயிர் துறப்பேன்” என்று சூளுரைத்திருந்தாள்.

ஆனால் இருவரும் இணைவதை மற்ற கடவுளர்கள் வேறு சில காரணங்களுக்காக விரும்பவில்லை. சிவபெருமான் அப்பெண்ணை மணப்பதை தடுக்க எண்ணிய அவர்கள் சதி செய்ய திட்டமிட்டனர்.

சிவபெருமான் வரும் வழியில் சூரியன் உதிப்பதை போன்று தவறாக சித்தரித்தனர். “சூரியன் உதித்து விட்டது என நம்பி, இனி தம்மால் அப்பெண்ணை அடைய முடியாது” என்று விரக்தி அடைந்தார் சிவபெருமான்; அப்பெண்ணோ குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமான் வராததால், யோக நிலையின் தீவிரத்தில் உயிர் துறந்தாள். இப்போதும் அப்பெண்ணை நாம் கன்னியாகுமரியில் குமரிப் பெண்ணாக தரிசிக்க முடியும்.

ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த சிவபெருமான் தனக்குள் எழுந்த மனச்சோர்வுடன் வந்தமர்ந்த இடம்தான் வெள்ளியங்கிரி. பனி போர்த்தப்பட்டு கைலாயத்தை பிரதியெடுத்தது போல் வெள்ளை நிறத்தில் மிளிரும் வெள்ளியங்கிரியில் ஈசன் அமர்ந்த அதிர்வுகளை இன்றும் மலை ஏறுவோர் உணர்கின்றனர்.

மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும் வகையில் ஏழு அடுக்கு மலையாக அமைந்துள்ளது வெள்ளியங்கிரி. இம்மலையில் இருக்கும் நல்லதிர்வுகளை உள்வாங்கவும், தெய்வீகத்தில் திளைத்திருக்கவும் இன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசிக்கின்றனர்.

குறிப்பாக ஈஷாவின் சிவாங்கா யாத்திரிகள் 42 நாட்கள் விரதமிருந்து, கடைசி நாளில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் நிறைவு செய்கின்றனர். மலையில் இருக்கும் ஈசனை உயிர் இனிக்க தரிசித்து திரும்புகின்றனர்.

மேலும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகியை அனைவரும் தரிசிக்கும் வண்ணம் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

கோவை ஈஷா யோக மையத்திலிருந்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி புறப்பட்ட 4 ரதங்கள் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 35,000 கி.மீ தூரம் வலம் வந்த வண்ணம் உள்ளன. இந்த ரதங்கள் மார்ச் 8 ஆம் தேதி மஹா சிவராத்திரி அன்று ஈஷா யோக மையத்தை வந்தடையும். இந்த யாத்திரையில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 233

    0

    0