வனத்துறையினரை திணற வைத்த சிறுத்தை : தோட்டத்தில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்தது.. ஒருவர் காயம்… அச்சத்தில் பொதுமக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2022, 11:12 am
திருப்பூர் : அம்மாபாளையம் பகுதியில் புகுந்த சிறுத்தை தாக்கி ஒருவர் காயமடைந்த நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
திருப்பூர் அவிநாசி அருகே பாப்பான்குளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பொங்குபாளையத்தில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் கழிவு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 20 கிராமங்களில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
அவிநாசி அருகே பாப்பான்குளம் கிராமத்தில் கடந்த 24-ம் தேதி தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில், வன ஊழியர் உட்பட 3 பேர் காயம் அடைந்த நிலையில், நேற்று 3-ம் நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாப்பான்குளத்தில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பொங்குபாளையம் பகுதியில் தென்பட்டதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் நேற்று வனத்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்ததாக, அவ்வழியாக காரில் சென்றவர்கள் பெருமாநல்லூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற பொங்குபாளையத்தை ஒட்டி உள்ள தோட்டத்துக்கு பகுதியில் நேற்று முன் தினம் இரவு அப்பகுதியில் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமியிலான வனத்துறையினர் நேற்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை – பொங்குபாளையம் ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள துரை என்பவரது தோட்டத்தில், சிறுத்தையின் கால்த்தடம் மற்றும் கழிவுகளை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு வனத்துறையினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியை தொடங்கினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணி வாக்கில் பொங்குபாளையம் கிராமத்துக்கு பால் ஊற்றுவதற்காக வந்தவர் சிறுத்தையை பார்த்ததாகவும், அதனை நாய் துரத்தியதாகவும் தெரிவிக்க அப்பகுதியில் நேற்று வனத்துறையினர் கால்த்தடம் மற்றும் எச்சம் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக, வனத்துறை மூத்த அலுவலர்கள் கூறியதாவது: சிறுத்தை நடமாட்டம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் பாப்பான்குளத்தில் இருந்து பொங்குபாளையத்துக்கு 25 கி.மீ. தூரம் பயணித்துள்ளது. இரவில் நடமாடுவதால், எளிதாக யாரும் கண்டுபிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து தேடி வருகிறோம்.
ஏற்கனவே இப்பகுதியில் பல மாதங்களாக தங்கியிருந்து, வாழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தொடர்ந்து பொங்குபாளையம் பகுதியில் 20 கேமராக்களை பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கிறோம். பாப்பான்குளத்திலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
திருப்பூர் மாவட்ட துணை வன பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணசாமி, அவிநாசியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாப்பான்குளம் அன்றி, பொங்குபாளையம், ஈட்டிவீரம்பாளையம், பரமசிவம்பாளையம், அய்யம்பாளையம், மங்கலம் உட்பட 20 கிராமங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உள்ளோம்.
8 குழு அமைத்து 50 பேர் இதில் ஈடுபட உள்ளனர். சுழற்சி முறையில், இரவு மற்றும் பகல் என 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். அதேபோல் மேற்கண்ட கிராமங்களில் நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் கேமராக்கள் பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளோம்.
பொங்குபாளையம் கிராமத்தில் கண்டறியப்பட்ட சிறுத்தையின் எச்சம், கழிவுகளை சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் மரபணு விஷயங்களை கண்டறிய உள்ளோம். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வனத்துறையினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள் என்றார்.
இந்நிலையில் சிறுத்தையானது இன்று திருப்பூர் – அம்மாபாளையம் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றில் புகுந்தது. அதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ராஜேந்திரன் என்பவரை சிறுத்தை தாக்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.