பேசுவதை தவிர்த்த காதலி கழுத்தறுத்து கொலை… ஒரு வருடம் கழித்து காதலன் எடுத்த விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 1:29 pm

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற ராமு. என்ஜினியரிங் பட்டதாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு சென்னை அருகே மறைமலை நகர்ப் பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.

சென்னை குரோம்பேட்டையிலுள்ள பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா. பி.எஸ்சி மைக்ரோபயாலஜி படித்து முடித்த சுவேதா, லேப் டெக்னீஷியன் வகுப்பில் படித்துவந்தார்.
சென்னையில் தங்கியிருந்த ராமச்சந்திரனுக்கும், சுவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு வருடங்களாகக் காதலித்துவந்தனர். இந்த நிலையில், சுவேதா ராமச்சந்திரனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பேச வேண்டும் என்று ராமச்சந்திரன் சுவேதாவை அழைத்திருக்கிறார். இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி மதியம் சுவேதா தன் தோழி சங்கீதாவுடன் சேர்ந்து கிழக்குத் தாம்பரம், ரெயில்வே காலனி பகுதிக்கு வந்திருக்கிறார்.

அங்கே இருவரும் நீண்ட நேரமாகப் பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தியிருக்கிறார்.

அதோடு, தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா உயிரிழந்துவிட, உயிருக்குப் போராடிய ராமச்சந்திரனை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றினர்.

மேலும், போலீசார் அவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். அதோடு அவர்மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த ராமச்சந்திரன் ஓர் ஆண்டாகச் சிறையிலிருந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

இந்தக் கொலை தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. ராமச்சந்திரன் இந்த வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில், நேற்று முதல்நாள் இரவு தன் சொந்த ஊரில் அவரின் வீட்டுக்குப் பின்புறமுள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இந்தத் தற்கொலை குறித்து, வலிவலம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவமறிந்து வந்த போலீசார் ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீஸார் இந்தத் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!