நாயை ‘நாய்’ என கூறியதால் நடந்த கொலை : பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்… விசாரணையில் திக்..திக்!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2023, 3:52 pm
திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயியை கொலை செய்த கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் மறவபட்டி அருகே உள்ளது உலகம்பட்டியார் தோட்டம் இப்பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் வயது 65. இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே உறவினரான சவரியம்மாள் என்பவர் தனது மகன்கள் வின்சென்ட் மற்றும் டேனியல் ஆகிய இரண்டு பேருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று 19.01.23 மாலை ராயப்பன் தனது விவசாய கிணற்றில் துணி துவைத்து விட்டு பேரனுடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சவரியம்மாள் வீட்டிலிருந்து நாய்கள் குலைத்துக் கொண்டு ஓடி வந்தது. இதைப் பார்த்த ராயப்பன் பேரனை பார்த்து நாய்களை விரட்ட குச்சி எடுத்து வருமாறு கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சவரியம்மாள் மகன் வின்சென்ட் அவருடன் வாய்த் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த வின்சென்ட்டின் தம்பி டேனியலும் (வயது 21) ராயப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் டேனியல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முதியவர் ராயப்பனை வலது பக்கம் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ராயப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் ராயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய டேனியலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.