ரவுடிசம் உள்ள கட்சி பாஜக… ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவே ஜெயிக்காது : அடித்து சொல்லும் செல்லூர் ராஜூ!!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2023, 12:42 pm
ரவுடிசம் உள்ள கட்சி பாஜக… ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவே ஜெயிக்காது : அடித்து சொல்லும் செல்லூர் ராஜூ!!
அதிமுக தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகபூப்பாளையும் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனத் தெரிந்ததால் ஏழைகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவினார். ஆனால் இப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள்.
அனைவருக்கும் ரூபாய் 1000 கொடுப்பதாக கூறிவிட்டு தற்போது அனைவருக்கும் அல்வா கொடுத்துள்ளார்கள். அதிமுக அரசு அனைவருக்கும் பாரபட்சமின்றி மிக்ஸி கிரைண்டர் கொடுத்தது. அதேபோல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வாங்குகிறார்கள்.
செந்தில் பாலாஜி அதனை தொடங்கி வைத்தார். தற்போது அமைச்சர் முத்துசாமி தொடர்ந்து வருகிறார். அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
கம்யூனிச கொள்கையையே திமுகவினரிடம் அடமானம் வைத்து விட்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கணக்கு கேட்ட பெரிய கணக்கு புலியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு அமைச்சரவையில் கடைசி துறையான தொழில்நுட்ப துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பல்லை பிடுங்கி உட்கார வைத்துள்ளனர்.
எங்கள் மீது துரும்பை வீசினால் நாங்கள் தூணை வீசுவோம். அதிமுக தேன்கூடு போன்றது. கலைத்தால் நாங்கள் கொட்டினால் தாங்கமாட்டீர்கள். தற்போது தமிழகத்தில் இருக்கும் ரவுடிகள் அனைவரும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். ஃபாஸ்ட்புட் தலைவர்களை பாஜக உருவாக்கி வருகிறது.
மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி பித்து பிடித்தது போன்று கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் தற்போது ஊர் ஊராக நடந்து செல்கிறார். ஜனநாயக நாடான இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற நிலை இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக வரக்கூடாது? மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய குரலால் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இருந்த பாஜகவை தமிழகம் நிராகரித்தது. அப்போது “மோடியா? இந்த லேடியா? நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். அப்போது மக்கள் ஜெயலலிதாவை தேர்வு செய்தார்கள்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகலாம். அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. குறிப்பாக கொரோனா தொற்று பரவல் காலத்தில் டாஸ்மாக், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வருவாய் இல்லாமல் கஜானா காலியான போதும் பொருளாதாரம் நிலைகுலையாமல் மக்கள் நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக கூடாது? அன்றைக்கு மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்தது.
எனவே எடப்பாடியார் பிரதமர் ஆக முழு தகுதியும் கொண்டவர். ராஜேந்திர பாலாஜி எடப்பாடியார் பிரதமர் ஆவார் என்றவுடன் சிரிப்பா? எதற்கு சிரிக்க வேண்டும்? நாட்டின் பிரதமராக வரக்கூடிய அனைத்து தகுதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. அதனால்தான் நாங்களே கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்.” எனப் பேசியுள்ளார் செல்லூர் ராஜூ.