தலைக்கேறிய மதுபோதை…நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: நடுரோட்டில் பரபரப்பு..!!

Author: Rajesh
19 April 2022, 1:27 pm

கோவை: குடிபோதையில் நண்பர்கள் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் நூறடி சாலை நாயுடு லேஅவுட் முதல் வீதி பகுதியில் வசித்து வருபவர் குணா. தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தற்காலிக ஓட்டுநரான சந்தோஷ் என்பவரும் நேற்றிரவு காந்திபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் 10 மணிக்கு டாஸ்மாக் பார் மூடியதால் மது வாங்கி வந்து காந்திபுரம் பகுதியில் வைத்து அருந்தியபோது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் குணா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோசை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சந்தோஷ் கதறிய நிலையில் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி காவல் நிலைய தலைமைக் காவலர் சுகந்தராஜா மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் கதறல் சத்தம் கேட்டு விரைந்து சென்று இருவரையும் விலக்கி விட்டனர்.

பின்னர் கத்தி குத்து காயங்களுடன் இருந்த சந்தோஷ் மற்றும் லேசான காயங்களுடன் இருந்த குணா ஆகிய இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் சாலையில் வைத்து ஒருவரையொருவர் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்