விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்க முயன்ற காவலர் ; சிசிடிவி காட்சிகள் வெளியானதால் ஆக்ஷனில் இறங்கிய கமிஷனர்..!!
Author: Babu Lakshmanan29 September 2022, 9:40 pm
கன்னியாகுமரி : கன்னியாகுமரி விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்க முயன்ற காவலர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூர்கரை லில்லி ஜனட். இவர் கடந்த 14ம் தேதி மண்டைக்காடு காவல் நிலையத்தில் பக்கத்து வீட்டை சார்ந்த ஐயாதுரை என்பவர் சில நபர்களுடன் சேர்ந்து கோயில் ஒன்றை கட்ட முயற்சிப்பதாகவும், தட்டிக்கேட்ட தன்னை மிரட்டுவதாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு 24ம் தேதி அன்று மண்டைக்காடு காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் லில்லி ஜனட் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, லில்லி ஜெனட் போலீசார் வந்த தகவலை, தனது கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்து கொண்டிருந்த நிலையில், உதவி ஆய்வாளர் முரளிதரன் லில்லி ஜனட்-ஐ அடிக்க முயன்றதோடு, அவரது செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார்.
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், உதவி ஆய்வாளர் முரளிதரனை மண்டைக்காடு காவல் நிலையத்தில் இருந்து, நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.