காதல் திருமணம் செய்த காவலர்.. மாமியார் வீட்டுக்கே அனுப்பி வைத்த போலீசார் : தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார்!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 5:17 pm
Pol
Quick Share

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் 50, வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஆஸ்மி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

ஆஸ்மி சி ஏபடித்து முடித்து விட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக தினமும் வீட்டிலிருந்து பேருந்தில் சென்று வருவது வழக்கம்

அதன்படி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கொரோனா காலத்தில் வேலைக்கு சென்று வந்தபோது மார்த்தாண்டம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரான அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி செல் போனில் பேசியும் நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறி ஆசை வார்த்தைகள் கூறி ஆஸ்மியை கைவசப்படுத்தி உள்ளதோடு மெல்ல மெல்ல ஆஸ்மியின் தாய் தந்தையிடமும் பழக்கத்தை ஏற்படுத்தி அடிக்கடி வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார்.

இரண்டு வருடங்களாக மகளுடன் தொடர்பில் இருப்பதால் தனது மகளை திருமணம் செய்யும்படி கூறி தன்னுடைய முகவரியை அலெக்ஸ் தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது அவர் தன்னுடைய முகவரி முழுவதையும் மாற்றி தான் சென்னையை சேர்ந்தவர் என்றும் தன்னுடைய தாய் தந்தையர் இருவரும் சிறுவயதிலேயே தன்னை பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு தனிமையில் விட்டு சென்றனர் என்றும் தற்போது தனக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என்றும் கூறி உள்ளார்.

இதனையடுத்து அவர் கூறியதை நம்பிய ஆஸ்மியின் பெற்றோர் தனது மகளுக்கும் ராஜேஷ்க்கும் திருமணம் நடத்த முடிவு செய்து அவர் கொடுத்த முகவரியிலேயே திருமண அழைப்பிதழ்கள் அடித்து பெண்ணுக்கு 15 சவரன் தங்க நகை வரதட்சணையாக போட்டு தடபுடலாக வீட்டின் அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்தி உள்ளனர்.

இதற்க்காக வேலைக்கு விடுமுறை எடுத்து நேற்றே குமரி மாவட்டத்திற்கு வந்த ராஜேஷ் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்துவிட்டு தாலிகட்டும் நேரத்திற்கு ஒரு காரில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 5 ஆண் நண்பர்களுடன் வந்துள்ளார் அவருக்கு உரிய வரவேற்பு அளித்து மணமேடைக்கு அழைத்து சென்ற பெண்ணின் உறவினர்கள் அங்கு வைத்து தாலி கட்டி திருமணத்தை முடித்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து உணவு விருந்துகள் நடந்து முடிந்து மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் ஆஸ்மியின் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் வசிக்கும் பெண் காவலர் ஒருவர் ராஜேஷை பார்த்ததும் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன் உங்களுடைய பெயர் என்ன இதற்கு முன் இங்கே டியூட்டி பாரத்துள்ளீர்களா என்று கேட்டுள்ளார்.

அப்போது ராஜேஷ் தான் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருவதாக கூறி உள்ளார்.

இது அந்த காவலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த இரண்டு வருடங்களுக்கு முன் கொரோனா காலத்தில் தன்னுடன் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த ராஜேஷ் தானே உனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகத்தானே கூறினாய் என்று கேட்க அவர் முன்னுக்கு பின் முரணாக உழறியுள்ளார்.

இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்த மணமக்கள் இருவரையும் சேர்த்து விட்டு புகைப்படம் ஒன்றை எடுத்து காவலர்கள் வாட்ஸ்அப் குழுவில் போட்டுள்ளார் அப்போது ஏராளமான காவலர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து அந்த காவலரிடம் தொடர்பு கொண்டு பேச பல உண்மைகள் வெளி வந்துள்ளன

அவற்றில் ராஜேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளதாகவும் அவர் மணிமுத்தாறு கேம்ப் காவலர்கள் தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்

இதனை உணர்ந்ததும் உடன் வந்த இளைஞர்கள் அங்கிருந்து நைசாக நழுவி சென்றதை தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆஸ்மி மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றனர்.

தொடர்ந்து அங்கு நின்றிருந்த காவலர் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ராஜேஷை காவல்நிலையம் அழைத்து வர முயன்றபோது பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சரமாரியாக தாக்கி நையப்புடைத்து எடுத்தனர்

அவர்களிடம் இருந்து ராஜேஷை மீட்ட காவலர்கள் ஆட்டோ ஒன்றில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து வந்தனர் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு வந்த ஆஸ்மி மற்றும் அவரது உறவினர்கள் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளனர்

அதன்பேரில் போலீஸார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 118

0

0