சிக்கன் கடையால் எழுந்த சிக்கல்…. மதுபோதையில் இருவருக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2023, 11:48 am

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் கனிநகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன்கள் பிரவீன் (23), பிரதீப் என்ற விமல் (24) ஆகிய இருவரும் சேர்ந்து புதியம்புத்தூர் டூ புதுபச்சேரி செல்லும் சாலையில் சிக்கன் கடை நடத்தி வருகின்றனர்.

இதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (21), அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (22) ஆகிய இருவரும் வேலை செய்து வந்துள்ளனர்.

மேலும் புதியம்புத்தூர் கீழத் தெருவை சேர்ந்த மாரிமுத்து (29), சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (27) ஆகிய இருவரும் சிக்கன் கடைக்கு சென்று உள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மாரிமுத்து மறைத்து வைத்திருந்த அறிவாளால் பிரவீன் என்பவரை வெட்டியதில் இடது கை மணிக்கட்டில் வெட்டு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து பிரவீன் கடையில் இருந்த அரிவாளை எடுத்து சின்னராஜ் என்பவரை வெட்டியதில் வலது தொடை மற்றும் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து பிரவீன் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்து, சின்னராஜ் ஆகிய இருவர் மீதும், சின்னராஜ் அளித்த புகாரின் பேரில் பிரதீப் என்ற விமல், சூரிய பிரகாஷ், ஜெயச்சந்திரன், பிரவீன் ஆகிய நான்கு பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக பிரதீப் என்ற விமல், சூரிய பிரகாஷ் ,ஜெயச்சந்திரன் ஆகிய மூவரையும் புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு சண்முகம் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!