நிர்வாகிகள் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய இபிஎஸ் : நெல்லை வேட்பாளரை மாற்றி அதிமுக அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan23 March 2024, 6:53 pm
நிர்வாகிகள் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய இபிஎஸ் : நெல்லை வேட்பாளரை மாற்றி அதிமுக அறிவிப்பு!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள அதிமுக அண்மையில் அதன் வேட்பாளர்களை அறிவித்தது. மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
அதில் திருநெல்வேலி தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர் சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து சிம்லா முத்துசோழனும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், சிம்லா முத்துசோழன் அதிமுக வேட்பாளராக களமிறங்கியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்த சமயத்தில் தான் தற்போது நெல்லை அதிமுக வேட்பாளரை மாற்றியுள்ளர் எடப்பாடி பழனிச்சாமி.
சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி நெல்லை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சிம்லா முத்துசோழன் மாற்றப்பட்டதற்கான காரணத்தை இன்னும் அதிமுக தலைமை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.