தாயிடம் தகராறு செய்த தந்தையை துடிதுடிக்க கொலை செய்த மகன் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…
Author: kavin kumar9 February 2022, 6:50 pm
சென்னை : தாயுடன் தகராறில் ஈடுபட்ட தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு உதவிகள் செய்யும் வேலைசெய்து வருகிறார். இவரது கணவர் தேசமுத்து பெயிண்டிங் வேலை செய்துவரும் நிலையில் 4 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று தேசமுத்து படுக்கையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததால் முனியம்மாள் அவரை கே.கே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதிசெய்ததுடன், அவரின் மரணத்தில் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் எம்ஜிஆர் நகர் போலீசார் தேசமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். அதில், நேற்று இரவு குடிபோதையில் தேசமுத்து மற்றும் அவரது மகன் டேவிட் என்ற விஜய்க்கு இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தேசமுத்துவின் இரு மகன்களான விஜய் மற்றும் பாலு ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தேசமுத்து குடிபோதையில் காலை முதல் தனது தாய் முனியம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், இரவும் அதேபோல் தனது தாயைத் திட்டியதால் ஆத்திரத்தில் இரவு அனைவரும் தூங்கிய பின்பு விஜய் தேசமுத்துவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கொலைவழக்கு பதிவுசெய்து டேவிட் என்ற விஜய்யை கைது செய்தனர்.