வெள்ளப் பாதிப்பில் தமிழக அரசு தோல்வி.. திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது : ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2023, 12:28 pm
வெள்ளப் பாதிப்பில் தமிழக அரசு தோல்வி.. திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது : ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளத்தை கையாள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.
தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை அதையெல்லாம் சரியாக கவனித்து கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்து இருக்காது. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.
மத்திய அரசு பற்றி குறைதான் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். மத்திய அரசை குறை சொல்ல மாநிலஅரசு என்ன செய்தீர்கள்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் எவ்வளவு நேரம் செலவிட்டார்? ஒரு இடத்தில் இருந்து நிவாரணம் கொடுப்பது முதலமைச்சரின் வேலை இல்லை.
நிவாரணம் மட்டும் போதாது அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்துள்ளோம் என்பது தான் முக்கியம். திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.