நடுரோட்டில் காரை நிறுத்தி குறட்டை விட்ட டிப் டாப் ஆசாமி : அடுத்த நிமிடமே வந்த போலீஸ்.. விசாரணையில் பகீர்.!!!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2023, 2:31 pm
கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நோக்கி வந்த கொண்டிருந்த கார் ஒன்று மேம்பாலத்திற்கு அருகில் சாலையிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டிந்தது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய அந்த சாலையில் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரின் உள்ளே பார்த்தபோது ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அந்த நபரை நீண்ட நேரமாக எழுப்ப முயற்சி செய்த போதிலும் அந்த நபர் எழுந்திரிக்காததால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார்(துடியலூர் காவல்நிலைய எல்லை) உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முற்பட்டனர்.
காவல்துறையினரும் பொதுமக்களும் நீண்ட நேரமாக எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். அப்போது அந்த நபர் அதிக குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் குடிபோதையில் இருந்த நபரை தட்டி எழுப்பி காரில் இருந்து வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதையில் இருந்த அந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் மன உளைச்சல் காரணமாக காலையிலேயே அதிகளவிலான மது அருந்தி வாகனத்தை ஓட்டி விபத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் வாகனத்தை ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்தி விட்டு உறங்கியது தெரியவந்துள்ளது. தற்போது இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.