முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறி.. சுமூகமான தீர்வு இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் எடுத்த முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2024, 6:43 pm
முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறி.. சுமூகமான தீர்வு இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் எடுத்த முடிவு!
காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. மறுநாளே அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்தடுத்து நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், அறிவித்தபடி ஜனவரி 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தன் ஊழியர்கள் மற்றும் மாற்று ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும், 100 சதவீத பேருந்துகளை இயக்க முடியாத சூழல் நிலவியது. பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியது.
இதனிடையே, ஜனவரி 10ஆம் தேதியும் போராட்டம் நீடித்த நிலையில், ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், பண்டிகை நேரத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுவதாகவும், வேலைநிறுத்தத்தால் நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என தலைமை நீதிபதி அமர்வு கூறினர்.
தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்..? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா..? அரசிடம் கேட்டு சொல்லுமாறு அரசு கூடுதல்தலை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்தது.
தமிழக அரசின் இந்த உறுதியை தொடர்ந்து, ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று இரண்டரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் சமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 7ஆம் தேதிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் தனி இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
0
0