சினிமா துணை நடிகரின் மனைவியை 2 மாதம் அறையில் பூட்டி வைத்து கொடுமை : பாஜக பிரமுகர் வீட்டில் இருந்து மீட்ட போலீசார்.!

Author: Udayachandran RadhaKrishnan
15 பிப்ரவரி 2024, 9:52 காலை
rescue
Quick Share

சினிமா துணை நடிகரின் மனைவியை 2 மாதம் அறையில் பூட்டி வைத்து கொடுமை : பாஜக பிரமுகர் வீட்டில் இருந்து மீட்ட போலீசார்.!

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன் (55). சினிமா துணை நடிகராக உள்ளார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (வயது 20).

மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே ஏபி நகரை சேர்ந்த பாஜக பிரமுகரான உமாராணி (வயது 55) என்பவரிடம், 6 லட்ச ரூபாய் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

வாங்கிய கடனை திரும்ப தராத காரணத்தினால், உமாராணி தனது வீட்டில், கடந்த, 2 மாதமாக தனியறையில் அடைத்து வைத்து, மாலதியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதியழகன் தம்பியும், சேலம் நீதிமன்றத்தில் பணிபுரியும் சதீஷ் என்பவர், திருச்சி வழக்கறிஞர்கள் சிலரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, வழக்கறிஞர் திவாகர் தலைமையில் சில வழக்கறிஞர்கள், உமாராணியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டிற்குள் நுழைய விடாத உமாராணி, அவர்களிடம், 2 மணி நேரத்திற்கு மேல் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதையடுத்து வழக்கறிஞர்கள், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காந்தி மார்க்கெட் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் மகேஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் உமாராணியின் வீட்டிற்கு விரைந்தனர்.

அங்கு தனியறையில் அடைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர். மீட்கப்பட்ட மாலதி, படபடப்பு நீக்காதவராக, கண்களில் நீர்பெருக, போலீசாரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்த காட்சி, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

தொடர்ந்து, அவரை தனியறையில் அடைத்து வைத்திருந்த உமாராணியை, போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மாலதியை மீட்ட காந்தி மார்க்கெட் போலீசார், மதியழகன் மகன் நடராஜின் நிலை என்ன என்பது குறித்து உமாராணியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் கந்துவட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர் இரண்டு மாதமாக தனியறையில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 441

    0

    0