கணவனை உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த மனைவி… சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 July 2023, 5:36 pm
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ளது வாசன் வேலி பகுதியில் 16வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் 40 வயதான சிவலிங்கம் வெங்காய வியாபாரியான இவருக்கு 36 வயதில் தனலட்சுமி என்ற மனைவி உள்ளார்.
சிவலிங்கத்துக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகத் தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் இவர்களுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனலட்சுமி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் தனலட்சுமி உறவினர்களான செந்தில்குமார், ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சுமதி உள்ளிட்டோர் காலை 10 மணி அளவில் சிவலிங்கத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
வீட்டுக்கு வந்த உறவினர்களோடு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி தனது உறவினர்களோடு சேர்ந்து இரும்பு கம்பியால் சிவலிங்கத்தைத் தாக்கி அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
அவரது உடலை மறைப்பதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத நாவலூர் குட்டப்பட்டு பாலத்துக்கு அடியில் உடலை எடுத்து கொண்டு வீசி விடலாம் என அனைவரும் முடிவு செய்துள்ளனர்.
சிவலிங்கத்தின் உடலைச் சாக்கு முட்டையில் கட்டிக்கொண்டு காரில் ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 4 மணியளவில் நாவலூர் குட்டப்பட்டு பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் அலுவலர் விஜயகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த சமயம் அவர்கள் உடலைப் பாலத்துக்கு அடியில் வீசுவதற்காகக் காரை நிறுத்தி உள்ளனர்.
ஆழ்நடமாட்டம் இல்லாத இடத்தில் வெகு நேரம் கார் நிற்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த காவலர் விஜயகுமார் காரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். காவலர் வருவதைக் கண்ட உறவினர் செந்தில்குமார் தப்பி ஓடிவிட்டார்.
தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகியோரால் தப்பி ஓட முடியவில்லை. பின்னர் விஜயகுமார் காரில் இருந்து மூன்று பேரிடமும் விசாரணை செய்துள்ளார். அவர்களின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்த காரணத்தினால் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் சிவலிங்கத்தின் உடல் மூட்டை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் உடனே ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும், காரையும், சிவலிங்கத்தின் உடலையும் ராம்ஜி நகர் காவல் துறையினர் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் தற்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய செந்தில்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கணவரைக் கொலை செய்து விட்டு அந்த உடலை மனைவி மறைக்க முயற்சி செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.