சாலையை கடந்து சென்ற வாலிபர்… அரசு பேருந்து மோதி கோர விபத்து : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2022, 8:34 pm
கன்னியாகுமரி : நிறுத்தி இருந்த அரசு பேருந்து திடீரென இயங்கியதால் சாலையை கடந்து சென்ற வாலிபரின் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கி விபத்துக்குள்ளான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து தேங்காய்பட்டிணத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து ஒன்று இன்று மதியம் காப்புகாடு சந்திப்பு பகுதியில் வந்து பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் ஏற்றி செல்ல நிறுத்தப்பட்டது.
பின்னர் பயணிகளை ஏற்றிவிட்டு நகரும் போது, சாலையின் மறுபுறத்தில் இருந்து வந்த வாலிபர் பேருந்து முன் கடந்து செல்லும் போது, பேருந்து மெதுவாக இயங்கி சென்று வாலிபர் மீது மோதியது.
இதில் வாலிபர் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரம் வாலிபரின் மேல் ஏறி இறங்கி உள்ளது. உடனே பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு பார்த்தபோது வாலிபர் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு காயம் பலமாக இருந்ததால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கடை போலீசார் விபத்தில் சிக்கிய அரசு பேருந்தை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய வாலிபர் நித்திரவிளை அருகே இரையுமன்துறை சுனாமி காலனி பகுதியை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விபத்து சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.