சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி நூதன திருட்டு… அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை…!!
Author: Babu Lakshmanan16 April 2022, 4:52 pm
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் ராஜேஷ், உஷா, நாகராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வளர்ந்து வரும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி ஆகும். ஆட்கள் நடமாட்டம் என்பது குறைந்த அளவில் இருக்கும்.
இந்நிலையில் நேற்று இரவு மூவரின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் 3 வீடுகளின் பூட்டை உடைத்து பீரோக்களில் இருந்த 16 பவுன் தங்கநகை, 2 கிலோ வெள்ளி, ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வீடுகளில் பாதுகாப்பிற்காக வைக்கபட்டுள்ள சிசிடிவி கோமிராவின் டிவிஆர் பாக்ஸையும் எடுத்து சென்றுள்ளனர்.கொள்ளை நடந்த பகுதியில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளையர்கள் தப்பிக்க தடயங்களை அழிக்கும் வகையில் நூதன முறையில் வீடுகள் முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.