பலகோடி செலவில் சீரமைக்கப்படும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சேதம்… வைரலாகும் வீடியோ… துறைமுக பொறுப்பு அதிகாரி பரபரப்பு உத்தரவு..!!
Author: Babu Lakshmanan21 June 2023, 12:42 pm
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்படும் அலை தடுப்பு சுவர் கடல் சீற்றத்தால் சேதமடைந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் துறைமுக பொறுப்பு அதிகாரி சிதம்பர மார்த்தாண்டம் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துறைமுகத்தின் கட்டுமான குறைபாடுகளால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
இதனால், துறைமுகத்தில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது 253 கோடி ரூபாய் செலவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மறு சீரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும், இதனால், கடல் சீற்றத்தில் கடல் அலை தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், இந்த சேதத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பொறுப்பு பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டம் கூறியதாவது :- தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்படும் அலை தடுப்பு சுவர் நிபுணர்களின் வழி காட்டுதல் படியே அமைக்கப்படுகிறது. கடல் சீற்றத்தால் சேதமடைந்தால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை.
அதனால் நன்மையே. ஏனென்றால் இயற்கையான முறையில் சரிமானம் எல்லாம் அமைக்கப்படும். அப்படி அமைக்கப்படும் பொழுது அதிகமான ஸ்திரத்தன்மையை அடையும். இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கட்டப்பட்ட குளச்சல் துறைமுகம் இன்றளவும் உறுதியாக உள்ளது.
இதனால், பொதுமக்கள் தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். மக்கள் இதற்காக பயப்பட வேண்டாம், என்றும் கேட்டுக்கொண்டார்.