தொடர் கனமழையால் போடி மலைச்சாலையில் மண்சரிவு… போக்குவரத்து துண்டிப்பு.. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்..!!
Author: Babu Lakshmanan18 டிசம்பர் 2023, 1:20 மணி
கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில கடந்த 18 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் போடி மெட்டு மலைச்சாலையில் ஒன்பதாவது மற்றும் பதினோராவது கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், எட்டாவது கொண்டை ஊசி வளைவு அருகில் உள்ள புலியூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நேற்று இரவு பத்து மணி முதல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக குரங்கணி காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் போடி மெட்டு மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்திருப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. மண் சரிவை அகற்றப்பட்டு பிறகு வாகன போக்குவரத்து தொடங்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், தமிழக, கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஏலத் தோட்டங்களுக்கு செல்லும் பணியாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை. போடி மெட்டு மலைச்சாலையில் போடி மெட்டு அருகே நீண்ட தூரம் இரவு முதல் காத்திருக்கும் வாகனங்கள் காவல்துறை அனுமதிக்காக காத்திருக்கிறது.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
0
0