புறக்கணிக்க வேண்டாம்… பல நன்மைகள் இருக்கு : புதிய கல்விக் கொள்கை குறித்து மாநிலங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2022, 9:38 pm
புதுச்சேரி : புதிய கல்வி கொள்கையில் பல நன்மைகள் உள்ளதால் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், தினமும் காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பள்ளி மாணவர்களுக்கு காலை பால் வழங்கப்பட்டு வரும் நிலையிம் மேலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் தனியார் பங்களிப்போடு பால் உடன் சத்துமாவு கலந்து கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தை கர்ப்பிணி பெண்களுக்கும் விரிவடைய செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர் முதல்கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள நிலையில் மேலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் கல்வி, கலாச்சாரம் மற்றும் சுகாராத்தை ஒன்றாக புதிய கல்வி கொள்கை எடுத்து செல்வதாகவும் எனவே பல நன்மைகள் உள்ள புதிய கல்வி கொள்கையை சரியாக உணர்ந்து கொண்டு அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.