இன்னும் 6 நாள் தான் இருக்கு.. மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? மீண்டும் ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின்!!
Author: Udayachandran RadhaKrishnan9 September 2023, 3:42 pm
இன்னும் 6 நாள் தான் இருக்கு.. மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? மீண்டும் ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின்!!
தமிழக அரசு கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி வரும் செப்டம்பர் 15 தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அதன்படி, தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பப்படிவங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டது.
இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதி உள்ள பயனாளிகளின் விண்ணப்பப் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் செப்டம்பர் 11ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் இந்த திட்டத்தின் சிறப்பு அதிகாரி உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.