மின்வெட்டு இல்லையாம்.. அது மின் தடையாம் : இது என்ன புது விளக்கம்.. அமைச்சரை விமர்சித்த தங்கமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 5:07 pm

தமிழ்நாடு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ வுமான பி.தங்கமணி நாமக்கல் லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் அதிமுக ஆட்சியிலும் கள்ளச்சாராய சாவு நடைபெற்றது என கூறியுள்ளனர்.

ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு இல்லை என்று கூறியுள்ளார்.

திமுக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் தவறான தகவல்களை தெரிவிப்பதை குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது 19,387 மெகாவட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாகவும் தமிழகத்தில் மின்வெட்டு எங்கும் இல்லை மின்சார தடை தான் இருக்கிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

13 துணை மின் நிலையத்தை அதிமுக அரசு செய்து வைத்ததை திமுக அரசு துவக்கி வைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் 19,387 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதற்கு அதிமுக ஆட்சியில் மின்பாதை அமைத்தது தான் காரணம்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த தலித் பெண் இருந்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் செந்தில்குமார் என்பவர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை நடத்தியுள்ளார்.

தலித் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் மாவட்ட தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்தத் தவறை செய்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜேடர்பாளையத்தில் நடைபெற்று வரும் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகம், காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்யதால் மட்டுமே பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

நாமக்கல்லில் இன்று ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக கொடி கட்டியுள்ளனர். குமாரபாளையம் பகுதிகளில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. இது குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.

அதிமுக கட்சி முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருந்த போதும் ஒ.பி.எஸ். அணி திமுகவின் பி டீம்மாக உள்ளது தெளிவாக தெரிகிறது என்றார். மக்களவை தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!