சாலையும் இல்ல.. சாக்கடையும் இல்ல : அதிகாரிகள் ஆய்வு செய்தும் தேங்கிய மழை நீர் : பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2022, 4:50 pm
சாக்கடை,சாலை வசதிகள் இல்லாததால், வீட்டிற்குள் மழை நீர் தேங்கியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர் அம்மன் கோவில் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
குனியமுத்தூர் 87 ஆவது வார்டில், நேற்று பெய்த கன மழையின் காரணமாக சாக்கடை வசதிகள் இல்லாததால், மழைநீர் , சாக்கடை நீரோடு சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
குறிஞ்சி நகர் , எஸ்.என்.ஆர். கார்டன், வசந்தம் கார்டன், மாகாராஜா காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், தேங்கிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால், மூன்று மாதத்திற்கு மேல் வடியாமல் அப்படியே இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த மாதம் தான் மாநகராட்சி ஆணையர், மேயர் , கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, மழை நீர் தேங்குவதை தவிர்க்க தற்காலிகமாக நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தற்போது பெய்த மழையால் மீண்டும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குனியமுத்தூர் வாகப் பெட்ரோல் பங்க் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிக தீர்வு வேண்டாம் , நிரந்திர தீர்வு அளிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.