பள்ளி மட்டும் செயல்பட்டால் போதுமா?பாடம் சொல்லி தர ஆசிரியர்கள் இல்லாத அவலம் : பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் தர்ணா போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 1:18 pm

திருப்பூர் : அவிநாசி அரசு துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியக்கக்கோரி பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவிநாசி பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள பழமை வாய்ந்த அரசு துவக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ மாணவிகளின் கல்வி பதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி வருவதாக கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பள்ளி நுழைவு வாயிலில் அமர்ந்து ஒரு மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பழைய பேருந்து நிலையம் அருகே அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அவினாசி நகரப்பகுதி சேர்ந்த 360 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் மூன்று நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வரக்கூடிய சூழ்நிலையில், தற்காலிகமாக ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டதால் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் பள்ளிக் கல்வித் துறை வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்து வந்துள்ளனர்.

இந்தப் பள்ளியின் 360 மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களாக இன்னும் ஐந்து பேர் நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் மூன்று பேரை மட்டும் வைத்து பாடம் நடத்தப்படுவதால் குழந்தைகளின் கல்வித்திறன் குறைந்து அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி,இப்பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று மற்ற பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்ப்பது அதிகரித்து வருகிறது.

இதை தடுத்திட கோரியும், நிரந்தரமாக 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க கோரியும் இன்று காலை பள்ளி துவங்கியது முதல் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளியின் வாயிலின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவினாசி காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து பள்ளியின் வளாகத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!