ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் நுட்பமாக எதுவுமில்லை.. சட்டமன்றத்தில் எடுபடுமா என்பது சந்தேகம் : அன்புமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2022, 4:14 pm

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் இந்த அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசனின் அறிக்கை ஆகியவை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த அறிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேர்த்தியாக இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால் சட்டமன்றத்தில் இந்த அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி.
ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை. அதே சமயம் தூத்துக்குடி துப்பாக்க்சிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாடமாக வைத்து காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் மனித உயிர்களை கண்மூடித்தனமாக தாக்குவது என்பதே தவறு.

அதிலும் சுட்டுக் கொல்வது உச்சகட்டமான ஒன்று. எனவே காவல்துறை இதை ஒரு படிப்பினையாக ஏற்று இனிவரும் காலங்கள் இவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!