தேவர் ஜெயந்தி விழாவுக்காக தர்காவில் தொழுகை.. முளைப்பாரிகளை வைத்து இஸ்லாமியர்கள் வழிபாடு!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2024, 2:58 pm
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேடை அமைத்து தேவரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த ஏற்பாடு இருந்தது.
இந்த ஏற்பாடுகளை வேடசந்தூர் முக்குலத்தோர் இளைஞர்கள் பேரவை செய்தனர். இதற்கு முன்பாக கருப்பதேவனூர், கோட்டூர், வேடசந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரிகளை எடுத்து வேடசந்தூர் சையது அப்துல் ரஹீம் அரபு அவுலியா தர்காவிற்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்னர் முளைப்பாரிகளை தர்காக்குள் வைத்து இஸ்லாமியர்கள் துவா கொடுத்த பிறகு அவர்களிடமிருந்து முளைப்பாரிகளை வாங்கிக் கொண்டு சந்தை ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணி கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் உடன் முளைப்பாரிகளை ஊர்வலமாக ஆத்துமேட்டில் உள்ள மேடைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹன்சிகா என்ற சிறுமி சிலம்பாட்டம் ஆடி அசத்தினார். மேலும் ஊர்வலத்தில் மக்கள் வேலு நாச்சியார் மற்றும் முத்துராமலிங்க தேவர் போல் வேடம் அணிந்து வந்தனர். அதில் தேவர் வேடம் அணிந்து வந்த நபருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து முத்துராமலிங்க தேவரின் திரு உருவப் படத்திற்கு 100 கிலோ எடையுள்ள மாலை அணிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 50 பேர் கவலைக்கிடம் : உஷார் மக்களே.!!
இதில் திமுக அதிமுக உட்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேவரின் ஜெயந்தி விழாவிற்கு கொண்டு வந்த முளைப்பாரிகளை தர்காவில் வைத்து இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.