3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அச்சத்தில் இருளர் மக்கள்!
Author: Hariharasudhan18 November 2024, 6:50 pm
திருவள்ளூரில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் செங்கல்வராயன், அப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது. மேலும், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் அம்மாணவியிடம் கூறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பள்ளி முடிந்து சென்ற மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வந்து முறையிட்டு உள்ளனர். ஆனால், அதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சரிவர பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, இது தொடர்பாக மாணவி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அம்மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூற, அதற்கு தகுந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் 5 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து பயின்று செல்வதாகவும் கூறப்படுகிறது.
