திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா : ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கிளம்பிய பக்தி கோஷம் …!!

Author: Babu Lakshmanan
23 August 2022, 1:29 pm

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா 7-வது நாளான இன்று காலை சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசன காட்சியளித்தார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 7-வது திருநாளில் சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

இதனை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடந்தது. இதனையடுத்து சுவாமி சண்முகர் சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு வண்ணமலர்களால் அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் காட்சியளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து சுவாமி சண்முகர் பிள்ளையன் கட்டளை மண்டபம் சென்றடைந்தார். அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேகம் அலங்காரம், திபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ம் தேதி நடக்கிறது. இந்த திருவிழா காண ஏற்பாடுகளை கோவில் தக்காரும், மாலை முரசு நாளிதழ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனருமான இரா. கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ