திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கோலாகலம் : அரோகரா கோசத்துடன் தேரை வடம்பிடித்த பக்தர்கள்..!!
Author: Babu Lakshmanan26 August 2022, 11:41 am
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவையொட்டி, சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் தெய்வானை அம்பாள் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 7வது திருநாளில் சுவாமி சண்முகர் சிவப்புசாதி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 8 ஆம் திருவிழாவில் சுவாமி சண்முகர் பச்சை கடசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.